ஆப்கான் இராணுவமே போராட தயாராக இல்லாத நிலையில் அமெரிக்க வீரர்கள் போரில் இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபன்கள் கைப்பற்றியது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) வெள்ளை மாளிகையில் அவர் ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தலிபான்கள் இவ்வளவு வேகமாக முன்னேறுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டது விவகாரத்தில் உறுதியாக இருக்கின்றேன்.
பயங்கரவாதத்தை ஒழிக்கவே அமெரிக்க இராணுவம் அங்கு சென்றது. அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறி விட்டதால் இராணுவம் அங்கிருந்து வெளியேறியது.
ஐந்தாவது ஜனாதிபதி ஒரு ஒரு போர் தொடரக்கூடாது. தேசத்தைக் கட்டமைப்பது, ஜனநாயகத்தை மேம்படுத்துவது என்பதெல்லாம் தங்களது போரின் நோக்கமல்ல.
அமெரிக்க மண்ணில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுப்பது மட்டும்தான் தங்களது நோக்கம். எதிர்பார்த்ததைவிட நிகழ்வுகள் மிக வேகமாக நடந்துவிட்டன. அமெரிக்கப் படைகளை தலிபான்கள் தாக்கினால், கடுமையான பதிலடி இருக்கும்.
தலிபான்களை ஒடுக்க ஆப்கான் இராணுவத்திற்கு அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவியது. தலிபான்களுக்கு எதிராக போராடமலே ஆப்கானிஸ்தான் ராணுவம் முழுமையாக சரணடைந்துள்ளது.
ஆப்கான் தலைவர்களின் ஒற்றுமையின்மையே தலிபான்களின் வெற்றிக்கு காரணம். ஆப்கானிஸ்தான் தற்போதையை நிலவரத்தை நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’ என கூறினார்.