நாட்டை விட்டு தப்பியோடிய ஜனாதிபதி அஷ்ரப் கானி, பெருமளவான பணத்துடன் புறப்பட்டுச் சென்றதாக ரஷ்ய செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ.வை மேற்கோள் காட்டி, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி ஞாயிற்றுக்கிழமை தலைநகர் காபூலில் இருந்து நான்கு கார்களில் பணத்துடன் வெளியேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஒரு அளவுக்கு மேல் ஹெலிகொப்டருக்குள் பணத்தை வைக்க முடியாததால், அவர் ஒரு தொகை பணத்தை வீதியில் வீசிச் சென்றதாக காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான காரணத்தை, அஷ்ரப் கானி தப்பிச்சென்ற விதத்தை வைத்தே முடிவு செய்து விடலாம் என அந்த செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் நிகிதா இஷ்சென்கோ கூறுகையில், ‘நான்கு கார்களில் பணம் நிரம்பியிருந்தது. அவர்கள் பணத்தின் மற்றொரு பகுதியை ஹெலிகொப்டரில் அடைக்க முயன்றனர். ஆனால் அனைத்து பணத்தையும் கொண்டுச் செல்ல முடியவில்லை. இதனால் பணத்தின் ஒரு பகுதி தார் வீதியில் கிடந்தது’ என கூறினார்.
அஷ்ரப் கானியின் தற்போதைய இருப்பிடம் தெரியவில்லை. தஜிகிஸ்தான் விமானத்தை தரையிறக்க அனுமதி மறுத்ததை அடுத்து அவர் ஓமானில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. கானி அமெரிக்கா செல்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு சற்று முன்பு, ஒரு நீண்ட முகநூல் பதிவில், கனி ஞாயிற்றுக்கிழமை இரத்தக்களரியைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு செய்வதாகக் கூறினார்.