அயர்லாந்து அரசாங்கம் தங்களது 36 குடிமக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சைமன் கோவெனி தெரிவித்துள்ளார்.
எனினும், ஏற்கனவே மூன்று அயர்லாந்து குடிமக்கள் வெளியேற்றப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அயர்லாந்து இராணுவத்தை தனிப்பட்ட முறையில் அனுப்புவது விடயங்களை எளிமையாக்குவதை விட சிக்கலாக்கும்.
அயர்லாந்து குடிமக்களுக்கு இடமளிக்க மற்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் உள்ளன. நாங்கள் ஐரோப்பிய ஒன்றிய பங்காளிகள், பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து காபூலை விட்டு வெளியேறும் விமானங்களில் இடங்கள் இருப்பதை உறுதிசெய்கிறோம்.
அயர்லாந்து குடிமக்களை வெளியேற்றுவதற்கான எளிதான வழி, எங்கள் பார்வையில், தங்கள் சொந்த குடிமக்களுக்காக இதைச் செய்ய முயற்சிக்கும் மற்ற நாடுகளுடன் கூட்டு சேர்ந்து பணியாற்றுவதாகும்.
அவர்களில் சிலருடன் நாங்கள் ஏற்கனவே உடன்பட்டுள்ளோம். அவர்கள் அயர்லாந்து குடிமக்களுக்கும் இடம் இருப்பதை உறுதி செய்வார்கள்’ என கூறினார்.