கடந்த ஜூலை மாதத்திலிருந்து 18,000 ஆப்கானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து ஆட்களை வெளியேற்ற தினமும் 20 முதல் 30 முறை விமானங்களை இயக்கவும், அதன்மூலம் தினசரி சுமார் ஐந்தாயிரம் பேரை வெளியேற்றவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ‘இராணுவ விமானம் மட்டுமல்ல, பிறநாட்டு விமானங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் பாதிக்கபட்ட மக்களை விமான மூலம் வெளியேற்ற காபூல் விமான நிலையத்தைப் பாதுகாத்தோம்.
இந்த வெளியேற்றும் பணி ஆபத்தானது, இது ஆயுதப் படைகளுக்கு ஆபத்துகளை உருவாக்கி உள்ளது. இறுதி முடிவு என்னவாக இருக்கும். அது என்னவாக இருக்கும் என்பதை என்னால் உறுதியளிக்க முடியாது.
ஜூலை மாதத்திலிருந்து 18,000க்கும் அதிகமான மக்களை நாங்கள் ஏற்கனவே வெளியேற்றியுள்ளோம். (காபூலில் இருந்து) ஒகஸ்ட் 14ஆம் திகதி முதல் எங்களது இராணுவ விமானப் பயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது’ என கூறினார்.
தலிபான்களுடனான பேச்சுவார்த்தை விபரங்களை அறிந்த ஒரு அரச அதிகாரி, அமெரிக்க படைகள் ஒகஸ்ட் 31ஆம் திகதி முழுமையாக வெளியேறும் வரை தலிபான்கள் புதிய அரசாங்கம் அமைப்பது குறித்து எந்த முடிவோ, அறிவிப்போ வெளியிட மாட்டார்கள் என கூறினார்.