ஸ்பெயினின் கேனரி தீவுகளின் கடற்பகுதியில், ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 52 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுவரை உயிர் பிழைத்த ஒரு பெண் ஸ்பெயினின் கடல்சார் மீட்பு சேவைக்கு கூறிய தகவலின் படி குறித்த படகு 53 புலம்பெயர்ந்தோருடன் ஒரு வாரம் முன்னதாக ஆபிரிக்காவிலிருந்து புறப்பட்டது.
தீவுகளுக்கு தெற்கே 255 கிலோமீட்டர் தொலைவில் வியாழக்கிழமை அட்லாண்டிக் பெருங்கடலில் குறித்த படகு மூழ்குவதை ஒரு வணிகக் கப்பல் கண்டது.
இதனையடுத்து, ஸ்பெயின் அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பாளர்கள், சம்பவ இடத்தில் ஒருவர் மட்டுமே உயிருடன் இருப்பதைக் கண்டார்.
விபத்துக்குள்ளான படகின் பாகங்களை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடிய நிலையில், இருந்த பெண்னொருவரை மட்டும் மீட்டு, அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்து பல மணி நேரங்கள் ஆனதால், கடலில் மூழ்கிய 52 அகதிகளும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
படகு மேற்கு சஹாரா கடற்கரையிலிருந்து புறப்பட்டதாகவும், பயணிகள் ஐவரி கோஸ்டில் இருந்து வந்ததாகவும் உயிர்தப்பிய பெண் கூறியுள்ளார்.
கேமினாண்டோ சின் ஃபிரான்டெராஸ் செஞ்சிலுவை சங்கத்தின் தகவலின் படி, 35 ஆண்கள், 16 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இதுவரை உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.