மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப்பை, மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா நியமித்துள்ளதாக அரண்மனை தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளில் மலேசியாவின் மூன்றாவது பிரதமராக இஸ்மாயில் இருப்பார். 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற பிறகு அவர் இன்று (சனிக்கிழமை) பதவியேற்பார் என்று அரண்மனை தெரிவித்துள்ளது. இது ஒரு எளிய பெரும்பான்மைக்குத் தேவையான 111ஐ விட அதிகம்.
கடந்த திங்கட்கிழமை பதவி விலகிய தற்போதைய பிரதமர் முகைதீன் யாசீன் அமைச்சரவையில் துணைப் பிரதமராகப் பொறுப்பு வகித்து வரும் இஸ்மாயில் சப்ரி, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் முகைதீனின் கூட்டணி தக்கவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரித்தானியாவிடமிருந்து மலேசியா கடந்த 1957ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து நாட்டை ஆண்டு வந்த மலாய்ஸ் தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், மீண்டும் பிரதமராகிறார்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு மகாதிர் முகமது நாட்டின் பிரதமரானார். அவரது கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை முகைதீன் யாசீன் தலைமையிலான கட்சி திரும்பப் பெற்றதால், மகாதிர் முகமது தனது பதவியை இராஜிநாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து, முக்கிய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து முஹைதீன் யாசீன் நாட்டின் பிரதமர் பொறுப்பைக் கடந்த ஆண்டு மார்ச்சில் ஏற்றார்.
கொரோனா காரணமாக கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையை மன்னரின் ஒப்புதல் இல்லாமலேயே பிரதமர் முகைதின் யாசின் திரும்பப்பெற்றது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து பிரதமர் முகைதின் யாசின் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில்ல் அங்கம் வகித்து வந்த ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கூட்டணியிலிருந்து விலகியது.
இதனால் பிரதமர் முகைதின் யாசின் அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை இழந்தது. மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளும் அரசாங்கம் பெரும்பான்மை இழந்தால் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
ஆனால் பிரதமர் முகைதின் யாசின் தனது அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் கூறி வந்தார். ஆனால் நாடாளுமன்ற கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் பெரும்பான்மை பெறத் தவறியதால், தனது பதவியை இராஜிநாமா செய்தார்.
முகைதின் யாசின் கடந்த திங்கட்கிழமை 17 மாதங்களுக்குப் பிறகு தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து தற்போது நாட்டின் எட்டாவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் நியமிக்கப்பட்டுள்ளார்.