காலக்கெடுவுக்குப் பிறகும் அதாவது ஒகஸ்ட் 31ஆம் திகதிக்குப் பிறகு அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானில் வைத்திருக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பெடனிடம் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கேட்டுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஜி-7 நாடுகளைச் சேர்ந்த உலகத் தலைவர்களின் அவசரக் கூட்டத்தில் பிரதமர் இந்த கோரிக்கையை முன்வைப்பார்.
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பல ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் வெளியேற விரும்புகின்றனர்.
இதனிடையே இந்த மாத இறுதிக்குள் அனைத்து படைகளையும் வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
ஆனால், காலக்கெடுவை நீடிப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாக பைடன் கூறியுள்ளார்.
பிரித்தானிய படைகளை திரும்பப் பெறுவதற்குநிலையான திகதி இல்லை என அரசாங்க அதிகாரிகள் கூறினாலும், அமெரிக்கப் படைகள் இல்லாமல் மீதமுள்ள நட்புப் படைகள் அந்தப் பகுதியை பாதுகாக்க முடியாது என்று அஞ்சப்படுகிறது.
காபூலில் பிரித்தானியாவின் 1,000க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.