தங்கள் மகன் ஹார்வி வில்கூஸைப் பாதுகாக்கக் கிடைத்த பல வாய்ப்புகளை பாடசாலை நிர்வாகம் தவறவிடாமல் இருந்திருந்தால், அவன் இன்று உயிரோடு இருந்திருப்பான் என்று உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
15 வயதான ஹார்வி, கடந்த ஆண்டு (Sheffield)ஷெஃபீல்டில் உள்ள (All Saints Catholic High School )ஆல் செயிண்ட்ஸ் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியின் உணவகத்திற்கு வெளியே சக மாணவன் ஒருவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
இதேவேளை, ஹார்வியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில், அவரது பெற்றோர் மார்க் மற்றும் கரோலின் வில்கூஸ் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கொலையாளி மாணவனால் ஏற்படக்கூடிய அபாயத்தைக் கணிக்க பாடசாலை நிர்வாகம் தவறிய பல இடங்களை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது:
அதன்படி, கொலையாளி முகமது உமர் கான், தனது முந்தைய பாடசாலையில் 130 முறை வன்முறை மற்றும் ஆயுதங்கள் தொடர்பான சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
2024 வசந்த காலத்தில் அவர் இந்தப் பாடசாலைக்கு மாறியபோது, அந்தத் தகவல்கள் ஆய்வு செய்யப்படவில்லை.
2024 அக்டோபரில் நடந்த பாடசாலை சுற்றுலாவின் போது, கான் கத்தி மற்றும் பிபி துப்பாக்கி (BB gun) வைத்திருந்ததாக ஏனைய மாணவர்கள் புகார் அளித்தனர். ஆனால் அது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை.
இதேவேளை, 2024 டிசம்பரில் கானின் பையில் கோடாரி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், பாடசாலையில் உரிய பின்தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஹார்வி கொல்லப்பட்ட அன்று, கான் கத்தி வைத்திருப்பதாக மீண்டும் ஒரு புகார் எழுந்தது. ஒரு ஆசிரியர் அவனிடம் “ஆயுதம் வைத்துள்ளாயா?” என்று கேட்டாரே தவிர, அவனது உடமையைச் சோதனை செய்யவில்லை என பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறு மாணவனின் உயிரிழப்பை தடுக்க பல வாய்ப்புகள் இருந்தும் பாடசாலை நிர்வாகம் அதனை செய்யவில்லை என பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.
இதேவேளை, சம்பவம் குறித்து ஹார்வியின் தந்தை மார்க் கூறுகையில், அறிக்கை வெளியான பின்னரும் பாடசாலை நிர்வாகம் இதுவரை “மன்னிப்பு கேட்கவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.













