யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், 5.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 12.35 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஆந்திராவில் காக்கிநாடாவின் தென்கிழக்கில் 296 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இன்று அதிகாலை தமிழகத்தின் சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், குண்டூர் மற்றும் திருப்பதி ஆகிய இடங்களிலும் சிறியளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறிருப்பினும் இதனால் உயிர்ச்சேதம் அல்லது சொத்து சேதம் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.