உக்ரேனியர்களை வெளியேற்ற ஆப்கானிஸ்தானுக்கு வந்த உக்ரேனிய விமானம் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனியர்களை வெளியேற்றுவதற்காக இந்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்ததாக கூறப்படுகிறது.
குறித்த விமானம் உக்ரேனியர்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு பதிலாக அடையாளம் தெரியாத பயணிகளுடன் ஈரானுக்கு சென்றதாக உக்ரேனிய பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விமானம் கடத்தப்பட்டமையினால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தமது நாட்டு பிரஜைகளை வெளியேற்றும் முயற்சியில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆப்கானிஸ்தானிலிருந்து 31 உக்ரேனியர்கள் உட்பட 83 பேருடன் ஒரு இராணுவ விமானம் கியேவுக்கு வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சுமார் 100 உக்ரேனியர்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற காத்திருப்பதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.