கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது லீக் போட்டிகளில் முறையே ஜமைக்கா தலாவாஸ் மற்றும் ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
இதில் சென். கிட்ஸ் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில், ஜமைக்கா தலாவாஸ் அணியும் செய்ன்ட் லுஸியா கிங்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற செய்ன்ட் லுஸியா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா தலாவாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆந்ரே ரஸ்ஸல் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் கென்னர் லீவிஸ் 48 ஓட்டங்களையும் வோல்டன் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
செய்ன்ட் லுஸியா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், ஒபேட் மெக்கொய் 3 விக்கெட்டுகளையும் ரொஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 256 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய செய்ன்ட் லுஸியா கிங்ஸ் அணி, 17.3 ஓவர்கள் நிறைவில் 135 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டிம் டாவிட் 56 ஓட்டங்களையும் வஹாப் ரியாஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஜமைக்கா தலாவாஸ் அணியின் பந்துவீச்சில், மிகேல் பிரிடோரியஸ் 4 விக்கெட்டுகளையும் இம்ரான் கான் 3 விக்கெட்டுகளையும் கிறிஸ் கிரின் மற்றும் ஆந்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 14 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 3 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஆந்ரே ரஸ்ஸல் தெரிவுசெய்யப்பட்டார்.
சென். கிட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில், ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியும் பார்படோஸ் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பார்படோஸ் றோயல்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பார்படோஸ் றோயல்ஸ் அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அசாம் கான் 30 ஓட்டங்களையும் க்ளென் பிலிப்ஸ் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில், இசுரு உதான 5 விக்கெட்டுகளையும் ராம்போல் 2 விக்கெட்டுகளையும் அகீல் ஹொசைன் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 123 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி, 16.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிய்ரன் பொலார்ட் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் தினேஷ் ராம்தின் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பார்படோஸ் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஆமிர் 3 விக்கெட்டுகளையும் ஒசேன் தோமஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இசுரு உதான தெரிவுசெய்யப்பட்டார்.