தண்ணிமுறிப்பு பகுதியில் இடம்பெறுகின்ற காணி அபகரிப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறித்த இடத்திற்கு நேரில் சென்று ஆராய்ந்தார்.
குறித்த இடத்திற்கு இன்று களவிஜயம் மேற்கொண்ட அவர், நிலமைகள் தொடர்பாக பார்வையிட்டதுடன், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நிலைமைகள் தொடர்பாக தொலைபேசியூடாக கலந்துரையாடினார்.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் வசித்த மக்கள் யுத்த சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் குடியமர்ந்தனர்.
இந்த மக்கள் தற்போது தமது காணிகளுக்குச் சென்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வனவளத்திணைக்களத்தினர் தடை விதித்து வருகின்றனர் என மக்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, தம்மில் பலருக்கு வேறு விவசாயக் காணிகள் இல்லை என இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கு 45 பேருக்குச் சொந்தமான சுமார் 170 ஏக்கர் காணியில் விவசாயம் செய்வதற்கும் குடியமர்வதற்கும் வனவளத்திணைக்களம் தடையாக உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.