தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
கொழும்பு. ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அவிஷ்க பெனார்டோ 118 ஓட்டங்களையும் சரித் அசலங்க 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கார்கிஸோ ரபாடா மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மார்கிரம் மற்றும் சம்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 301 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணியால், 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹெய்டன் மார்கிரம் 96 ஓட்டங்களையும் வெண்டர் டுஸன் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சில், அகில தனஞ்சய 2 விக்கெட்டுகளையும் சமிக கருணாரத்ன, வனிந்து ஹசரங்க மற்றும் பிரவீன் ஜயவிக்கிரம ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 115 பந்துகளில் 2 சிக்ஸர் 10 பவுண்ரிகள் அடங்களாக 118 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அவிஷ்க பெனார்டோ தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை கொழும்பு. ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.