நியூஸிலாந்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரொருவர் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில், படுகாயமடைந்துள்ளனர்.
நியூலின் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தாக்குதல்தாரியை சுட்டுக்கொன்றனர்.
இதுகுறித்து நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், ‘கடந்த 2011ஆம் ஆண்டு, இலங்கையைச் சேர்ந்த அந்த நபர் நியூஸிலாந்துக்கு வந்தார். பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் அவர் இருந்துள்ளார்.
ஒக்லாந்து நகர்ப்புற பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு சென்ற அவர் அங்கிருந்து கத்தியை எடுத்து மக்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.
அவரை கண்காணித்துவந்த பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில், ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளார். மூவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அருவருக்கத்தக்க, வெறுக்கத்தக்க, தவறான செயல் இன்று நடைபெற்றுள்ளது’ என கூறினார்.
அந்த நபரின் நோக்கம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடம் ஊக்கம் பெற்ற இக்கொள்கை வன்முறையால் ஆனது’ என பதில் அளித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து, கண்காணிப்பு வளையத்திலிருந்து வரும் அந்த நபர் குறித்து கூடுதல் தகவல்களை பகிர்ந்த கொள்ள பிரதமர் மறுத்துவிட்டார். இந்த நபர் குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சித்தாந்தம் குறித்த கவலைகள் காரணமாக, நியூஸிலாந்தின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கியவராக கருத்தப்பட்ட குறித்த நபர், ஆறு பேரை தாக்குவதற்கு முன்பு ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியூஸிலாந்தை உலுக்கிய தாக்குதலில் அப்பாவி இஸ்லாமியர்கள் 51 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.