நாட்டில் சட்டத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன சுயாதீனமாக செயற்படுகின்றன. எனவே இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஒருபோதும் கிடையாது என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இம்முறை நடைபெறவுள்ள மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பாக அதிகளவில் பேசப்படும். எனினும் அதனை சிறந்த முறையில் கையாள்வதற்கான நடவடிக்கைகள், இலங்கையின் பொதுச்சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன என ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், யுத்த காலத்தில் காணாமல் போனார் விவகாரம், மீள்குடியமர்த்தல், வடக்கு- கிழக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பினுடைய போராளிகளின் விடுதலை உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் பிரதம நீதியரசர் தலைமையில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலான ஆலோசனை சபை நியமிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆலோசனை சபையின் ஊடாக எதிர்காலத்தில் சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என ஜி.எல்.பீரிஸ் உறுதியளித்துள்ளார்.