நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், பங்களாதேஷ் அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 2-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
டாக்கா மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ஓட்டங்களை பெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நய்ம் 39 ஓட்டங்களையும் மொஹமதுல்லா ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரச்சின் ரவீந்ரா 3 விக்கெட்டுகளையும் அஜாஸ் பட்டேல், மெக்கொன்ச்சி மற்றும் பென்னட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 142 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அந்த அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டொம் லதம் ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களையும் வில் யங் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மெயிடி ஹசன் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நசும் அஹமட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 32 பந்துகளில் 5 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மொஹமதுல்லா தெரிவுசெய்யப்பட்டார்.