அமெரிக்காவில் ஐடா சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 82ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை முன்னதாக 46ஆக இருந்தது.
நியூயார்க், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா மற்றும் லூசியானா மாநிலங்களில் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை உள்ளது.
வடகிழக்கு அமெரிக்காவில் முன்னர் 40க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கட்டடங்களின் அடித்தளத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடுமென அஞ்சப்படுகின்றது.
கடந்த ஒகஸ்ட் 29ஆம் திகதி லூசியானாவைத் தாக்கிய பிறகு சூறாவளி கணிசமாக பலவீனமடைந்தது, ஆனால், அதனுடன் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதனால், வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. மேலும், வீதிகள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
ஐடா புயலின் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சிக்குச் செல்கிறார்.