உலகையே உலுக்கிய செப்டம்பர் 11 தாக்குதலில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர, நாடு தயாராகி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்.
20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட காணொளியில், உயிரிழந்த 2,977 பேருக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் தாக்குதல்களுக்குப் பதிலளித்த அவசரப் பணியாளர்களைப் பற்றிப் பேசிய பைடன், ‘நிமிடங்கள், மணிநேரங்கள், மாதங்கள் மற்றும் ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் உயிரைக் கொடுத்த அனைவரையும் நாங்கள் மதிக்கிறோம்’ என கூறினார்.
மேலும், ‘எவ்வளவு நேரம் கடந்துவிட்டாலும், இந்த நினைவுகள் சில வினாடிகளுக்கு முன்பு உங்களுக்கு செய்தி கிடைத்தது போல் எல்லாவற்றையும் வேதனையுடன் மீண்டும் கொண்டுவருகிறது’ என்று ஜனாதிபதி கூறினார்.
அதேவேளை, ‘ஒற்றுமை என்பது ஒருபோதும் உடைக்கப்பட முடியாத ஒன்று என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம்,’ என்று அவர் மேலும் கூறினார்.
நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளன. நினைவேந்தலை வழிநடத்த உள்ள பைடன், முதல் பெண் ஜில் பைடனுடன் மூன்று தாக்குதல் தளங்களை பார்வையிடுவார்.
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அல் கொய்தா திட்டமிட்ட இந்த தாக்குதல்களில், நான்கு அமெரிக்க பயணிகள் விமானங்கள் கடத்தப்பட்டு தற்கொலை தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.
அவற்றில் இரண்டு நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களை தாக்கின. மற்றொரு விமானம் அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் டிசிக்கு வெளியே உள்ள பென்டகனில் மோதியது. நான்காவது விமானம் பயணிகளின் போராட்டத்தால் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு மைதானத்தில் விழுந்து நொருங்கியது.
இந்த தாக்குதல்களில் நான்கு விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். இதில் 246 பர் பொதுமக்கள். 19 பேர் பயங்கரவாதிகள் அடக்கம்.
மொத்தமாக இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,977பேர் உயிரிழந்தனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர். ஆறாயிரத்து 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களிலெல்லாம் அமெரிக்காவின் மன உறுதியையும் ஒற்றுமையையும் காட்டும் வகையில் புதிய கட்டடங்களும் நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டு விட்டன. ஆனால், அவற்றுக்கு அடியில் சில ரகசியங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று பலர் இன்னமும் நம்புகிறார்கள்.