ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய முதல்நாள் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விவகாரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் , இலங்கை தொடர்பான 46 கீழ் 1 தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பிலான வாய்மூல அறிக்கையை சமர்பிக்கவுள்ளார்.
அத்துடன் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தர அமைப்புகள் கருத்து தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன், பதிலளிப்பதற்கான சந்தர்ப்பமும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இலங்கை சார்பில் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் காணொளி ஊடாக கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சார்பாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பிலும் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை ஆய்வு செய்து உண்மையான முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.