வடகொரியா ஜப்பானின் பெரும்பகுதியை தாக்கும் திறன் கொண்ட புதிய நீண்ட தூர பயண ஏவுகணையை சோதித்துள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வடகொரிய அரசாங்கம் நடத்தும் கொரிய மத்திய செய்தி முகமையான கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் பாதுகாப்பு அறிவியல் அகாடமி செப்டம்பர் 11ஆம் மற்றும் 12ஆம் ஆகிய திகதிகளில் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது என்றும், இரண்டு வருடங்களாக ஆயுதங்கள் வளர்ச்சியில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வடகொரியாவின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் மற்றும் விரோதப் படைகளின் இராணுவ சூழ்ச்சிகளை வலுவாகக் கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக இந்த சோதனை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறியுள்ளது.
வார இறுதியில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஏவுகணைகள் 1,500 கிமீ (930 மைல்) தொலைவில் பயணித்ததாக கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் ஆய்வாளர் அங்கித் பாண்டாவின் கருத்துப்படி, இது நாட்டின் முதல் நீண்ட தூர பயண ஏவுகணையாகும், இது அணு ஆயுதத்தை கொண்டு செல்லக்கூடியது. வட கொரியா இந்த ஆண்டு ஏற்கனவே இரண்டு குரூஸ் ஏவுகணை சோதனைகளை நடத்தியது.
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அமெரிக்க மற்றும் ஜப்பானிய அதிகாரிகளுடன் வட கொரியாவைப் பற்றி விவாதிக்க தென் கொரியாவின் உயர்மட்ட அணுசக்தி தூதர் ஜப்பானுக்குச் செல்லவிருக்கும் நிலையில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.
ஆனால், உணவு பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும் நாடு இன்னும் ஆயுதங்களை உருவாக்கும் திறன் கொண்டது என இதன்மூலம் வெளிப்படுகின்றது.
வடகொரியாவிலிருந்து கப்பல் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகத் தெரியும் என்றும், அமெரிக்கா கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் அமெரிக்க இராணுவத்தின் இந்தோ-பசிபிக் கட்டளை தெரிவித்துள்ளது.