தங்களது அணுசக்தி தளங்களை கெமராக்கள் மூலம் கண்காணிப்பதற்கு ஐ.நா அணுசக்தி கண்காணிப்புக் குழுவை அனுமதிக்க, ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.
அத்துடன், கெமராக்களின் மெமரி காட்களை மாற்றுவதற்கும் சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஈரான் கூறியுள்ளது. எனினும், அவை ஈரானிலேயே வைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீக்க சம்மதம் தெரிவித்த பிறகே முக்கிய அணுசக்தி தளங்களில் இருந்து கெமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒப்படைப்பதாக கூறிவந்த ஈரான், சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர் ரஃபேல் க்ரோஸி, ஈரானின் அணுசக்தி முகமையின் புதிய தலைவர் முகமது எஸ்லாமியை இந்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அணு ஆயுதங்களை உருவாக்க ஈரான் முயற்சிப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ஈரான் தொடர்ந்து இதை மறுத்து வருகிறது. தங்களது அணுசக்தித் திட்டம் ஆக்கப்பூர்வமானது என்று கூறுகிறது.