ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியவர்களுக்கு உதவ, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், தலிபான் ஆளுகையில் உள்ள ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவி வழங்க சர்வதேச சமூகத்தை ஐக்கிய நாடுகள் சபை முறைப்படி கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானியர்களுக்கு உணவு, மருத்துவம், சுகாதார வசதிகள், சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் போன்றவை அத்தியாவசியமாக தேவைப்படுகிறது என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு மிகவும் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. நீடித்த மோதல், கடுமையான வறட்சி மற்றும் கொவிட்-19 பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டு வருகிறது.
அங்கு வாழும் மக்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு ஏற்கெனவே உதவி தேவைப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தானில் சமீபத்திய முன்னேற்றங்கள் அங்கு ஏற்கெனவே நிலவி வந்த பாதிப்பை அதிகரித்துள்ளது.
ஒகஸ்ட் மாதத்தில் இஸ்லாமியவாத போராளிகள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை மீட்பதற்கு முன்பே, உள்நாட்டு மோதல் காரணமாக இந்த ஆண்டு 5,50,000க்கும் அதிகமான மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அதாவது, அந்நாட்டில் தற்போது 35 இலட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.