குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வொஷிங்டன் செல்லவுள்ளார்.
குறித்த மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கவுள்ளன.
இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்த மாநாட்டில் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் உரிமைகளை பாதுகாப்பது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசப்படவுள்ளது.
மிக முக்கியமாக தெற்காசிய நாடான ஆப்கானின் விவகாரம் குறித்து பேசப்படவுள்ளது. அதேநேரம் 23 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.