இந்தியாவில் கொரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதன்படி வட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த இரு வாரங்களில் குழந்தைகள் உள்ளிட்ட 100 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், ஹரியானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் காய்ச்சல் வேகமாக பரவிவருவதாகவும், நூற்றுக்கணக்கான குழுந்தைகளும் நோயாளிகளும் வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன.
மத்திய பிரதேசத்தில் மட்டும் கடந்த இரண்டு வாரங்களில் 3000 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே மேற்கு வங்க மாநிலத்தின் வட மாவட்டங்களில் அதிகளவிலான குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்படுவது குறித்த தகவல் வெளியாகிய நிலையில், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.