யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு பின்னர் உயிரிழந்தவர், ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, சம்பவம் இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை ஆரம்பித்த மல்லாகம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியுமாறும் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த சம்பவத்தில் நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது-24) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை முதன்மை வீதியின் ஓரமாக வீழ்ந்து கிடந்தவரை மீட்டு, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்த்தபோது, உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவ இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் வீதியில் தரித்து நின்றுள்ளது. இதன்போது அங்கு திரண்ட உறவினர்கள், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
அதாவது, இறுதிக் கிரியை இடம்பெற்ற வீடொன்றில் இருந்த சிலருடன் அவர் முரண்பட்டுக் கொண்டார் என்றும் அவர்களே கொலை செய்துள்ளனர் என்றும் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மோப்பநாயுடன் தடயவியல் பொலிஸார் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தாக்குதல் நடத்தியமைக்கான தடையங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.