போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறைத்தண்டை அனுபவித்துவரும் குற்றவாளிகளுக்கு, புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வலியுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகத் தண்டனை அனுபவிக்கும் கைதிகளைக் கையாளவேண்டிய முறை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய தன்னார்வ மருத்துவ உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர், நீதியமைச்சர் அலிசப்ரியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சிறைத்தண்டனையை அனுபவிக்கும் குற்றவாளிகளில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவ உதவி அவசியம் என்பதுடன் அதிலிருந்து அவர்கள் மீட்சியடைவதற்கான புனர்வாழ்வளித்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சிலர் குற்றவியல் தண்டனைகள் மூலம் போதைப்பொருள் பாவனையிலிருந்து மீளக்கூடும் என்றும் இருப்பினும் மிகையான போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தண்டனைகளை எதிர்கொள்ளக்கூடிய இயலுமையைக் கொண்டிருப்பதென்பது ஒப்பீட்டளவில் குறைவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, ஒருவரை சிறையில் அடைப்பதன் ஊடாக சமூகத்தின் போதைப்பொருள் பாவனையைக் குறைக்கமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவ உதவி அவசியம் என்பதுடன் அதிலிருந்து அவர்கள் மீட்சியடைவதற்கான புனர்வாழ்வளித்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டும் என்று அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.