காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் குடும்பத்தலைவர், அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
குறித்த குடும்பத்தலைவர், ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டமையே உயிரிழப்புக் காரணம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ வல்லுநரினால் அறிக்கையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவ இடத்துக்கு அண்மையாக உள்ள கட்டடத் தொகுதியில் பெறப்பட்ட சிசிரிவி பதிவின் அடிப்படையில், பெரிய சுத்தியல் உடன் பயணித்த சந்தேகநபரே, இளம் குடும்பத்தலைவரை தலையில் தாக்கி, கொலை செய்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் கடந்த வியாழக்கிழமை வீதியோரம் சுயநினைவற்ற நிலையில் ஒருவர் மீட்கப்பட்டார்.
அவரை மீட்டு, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்த்தபோது, உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.
குறித்த சம்பவத்தில் நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது-24) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்தையடுத்து அங்கு திரண்ட உறவினர்கள், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இறுதிக்கிரியை வீடொன்றில் சிலருடன் அவர் முரண்பட்டுக் கொண்டார் என்றும் அவர்களே கொலை செய்துள்ளனர் என்றும் உறவினர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
அதனடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவ இடத்துக்கு அண்மையாக உள்ள கட்டடத் தொகுதியில் பெறப்பட்ட சிசிரிவி பதிவின் அடிப்படையில் பெரிய சுத்தியல் உடன் பயணித்த நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபரை, மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது நீதிபதி, அவரை 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் மொட்டையான ஆயுதம் ஒன்றினால் தலையில் தாக்கப்பட்டதனால், இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார் என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ வல்லுநரினால் அறிக்கையிடப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரே இந்தக் கொலையை செய்துள்ளார் என சந்தர்ப்ப சூழல்நிலையின் அடிப்படையில் தம்மால் நிரூபிக்க முடியுமென காங்கேசன்துறை பொலிஸார் கூறியுள்ளனர்.