ஜேர்மனியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள், கடந்த மாதம் தலிபான் குழுவுக்கு எதிராக ஹம்பர்க் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானிலுள்ள பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கவும் குறித்த குழுவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சர்வதேசத்தை போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
அதாவது, ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகள், நாட்டின் சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் ஆகியவற்றுடன் தேசிய கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைக் கொண்ட சுவரொட்டிகளை ஏந்தி, ஆப்கானிஸ்தானியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக பஜ்வாக் ஆப்கான் செய்திசேவை ஏ.என்.ஐ மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
தலிபான், ஆப்கானிஸ்தானை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததை தொடர்ந்து அங்கு வன்முறைகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் தலிபான் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபையும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15 முதல் ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தலிபான் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.