ஆக்கஸ் கூட்டமைப்பில் இந்தியா இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் – தொடர்புத் துறை அமைச்சர் ஜென் சாகி, ‘இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் நிலைத்தன்மை நிலவ வேண்டும் என பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் விரும்புகின்றன. அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
வெறும் அடையாளத்திற்காக மட்டும் ஆக்கஸ் கூட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. அந்த புதிய கூட்டமைப்பில் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட வேறு எந்த நாடுகளும் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது’ எனத் தெரிவித்தார்.
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் நோக்கில் அவுஸ்ரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஆக்கஸ் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.
இந்நிலையில், இந்தோ – பசுபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு அமெரிக்காவுடன் மற்றுமொரு கூட்டணியை அமைப்பது தொடர்பாக இந்தியாவிடம் விளக்கமளிக்கப்பட்டதாக அவுஸ்ரேலியா தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.