மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை உருவாக்கி தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எங்கள் குறிக்கோள் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்கான கிராமப்புற மேம்பாட்டு முன்மொழிவுகள் தொடர்பில் இடம்பெற்ற விவாதங்களில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “ 2022 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் பொதுமக்களுக்கு அபிவிருத்தியின் நன்மைகளை விரைவில் கிடைக்கச் செய்வதற்காக பிராந்திய வளர்ச்சியில் கவனம் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், நாட்டில் புதிய தொழில்முனைவோரை உருவாக்குவதற்கு அதிக நிதி ஒதுக்கி, கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட இருக்கின்றது.
அதன்படி, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கு வழங்குவார்.
நாட்டில் உள்ளூர் தொழில்முனைவோரை உருவாக்கி, உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் நாட்டை தன்னிறைவு பெறும் என்ற நம்பிக்கையுடன் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தி, தேசிய பொருளாதாரத்திற்கு வலிமை சேர்க்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.