அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் பூஸ்டர் கொவிட் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
இருவரும் நேற்று (திங்கட்கிழமை) வெள்ளை மாளிகையில் ஃபைசர்- பயோஎன்டெக் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றனர்.
தடுப்பூசி பெறுவதற்கு முன்னதாக அவர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த தொற்றுநோயை வெல்லவும், உயிர்களைக் காப்பாற்றவும், எங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், எங்கள் பாடசாலைகளை திறக்கவும், நமது பொருளாதாரம் முன்னேறவும், அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்.
எனவே, தயவுசெய்து சரியானதைச் செய்யுங்கள். தயவுசெய்து இந்தக் தடுப்பூசிகளைப் பெறுங்கள். இது உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியும் மற்றும் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்’ என கூறினார்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் மற்றும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கடந்த வாரம் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை ஆதரித்தது.
அத்துடன், சில தொழில்களில் அதிக ஆபத்தில் இருக்கும் முன் வரிசை தொழிலாளர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறவும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பரிந்துரைத்தது.
அமெரிக்க குடிமக்களுக்கு மூன்றாம் தடவை தடுப்பூசியை வழங்குவதற்கு முன் வளரும் நாடுகளுக்கு அதிக தடுப்பூசி மருந்துகளை வழங்குமாறு பைடன் நிர்வாகத்தை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது.
ஆனால், உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற சுகாதார வல்லுநர்களின் விமர்சனங்களை பைடன் நிராகரித்தார்.
சமீபகாலமாக அதிக தொற்றுநோயான டெல்டா வகையுடன் தொடர்புடைய நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில் அதிகமான அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடுமாறு பைடன் வலியுறுத்தினார்.