கொழும்பு, நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை வளாகத்திலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் நேற்று(செவ்வாய்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை − உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
புலிகள் அமைப்பில் இருந்தபோது இவர் இம்ரான் – பாண்டியன் படையணியில் செயற்பட்டுள்ளார் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையின் மலசலக்கூடத்திலிருந்து கடந்த 14ஆம் திகதி கைக்குண்டொன்று மீட்கப்பட்டது.
இதனையடுத்து திருகோணமலை உப்புவெளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பொலிஸாருக்கு தகவல் வழங்கி பரிசு பெரும் நோக்கிலேயே தான் குண்டை வைத்ததாகவும், கொழும்பு விஜயராம பகுதியிலுள்ள அமைச்சரொருவரின் வீட்டில் புனரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவேளை குறித்த குண்டு கிடைத்தாகவும் குறித்த இளைஞர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
எனினும், அரச புலனாய்வு பிரிவு மற்றும் கொழும்பு குற்றப்பிரிவு இணைந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தின. இதன்பிரகாரம் முதலாவது சந்தேக நபருக்கு கைக்குண்டை வழங்கிய நபர் இனங்காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று உப்புவெளி பகுதிக்கு சென்ற புலனாய்வு பிரிவு மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் 40 வயதுடைய முன்னாள் போராளியை கைது செய்துள்ளனர்.
அதேவேளை, கைக்குண்டை வழங்கிய குறித்த நபர் அதை வெடிக்க வைப்பது தொடர்பில் 6 நாட்கள் பயிற்சி வழங்கியதாக வைத்தியசாலையில் குண்டை வைத்த சந்தேக நபர் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
பயிற்சி வழங்கப்பட்ட இடத்தையும் பாதுகாப்பு தரப்பினர் நேற்று கண்காணித்துள்ளனர்.
முன்னாள் போராளி குறித்த கைக்குண்டை வழங்கினாரா அல்லது அமைச்சரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டதா என்பது உட்பட இது தொடர்பில் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.