கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட 90-180 நாட்களுக்குப் பின்னர் ஒன்பது முக்கிய நீண்ட கொரோனா அறிகுறிகள் ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திமா ஜீவந்தரா கூறினார்.
இந்தப் புதிய ஆய்வு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தீவிரமான கொரோனா தொற்றுக்குப் பிறகு தொடரும் அல்லது உருவாகும் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளை விவரிக்க ‘நீண்ட கோவிட்’ என்ற சொல் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
‘நீண்ட-கோவிட் அறிகுறிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி இருந்தன என்றும் மேலும் அவை பெண்களில் சற்று அதிகமாகவே இருந்தன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, அசாதாரண சுவாசம், வயிற்று அறிகுறிகள், கவலை, மனச்சோர்வு மார்பு அல்லது தொண்டை வலி, அறிவாற்றல் பிரச்சினைகள், சோர்வு, தலைவலி, தசை வலி உள்ளிட்ட ஏனைய வலிகளும் இதில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.