புதிய நீண்ட கொரோனா அறிகுறிகள் குறித்து சுகாதார அமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உரிய நிபுணர்களுடன் ஒரு விரிவான கருத்தை கொண்டிருப்பது அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேலா குணவர்தன கூறினார்.
அதன்படி நாளை கூடும் தொழில்நுட்பக் குழு கூட்டத்தில் இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
இருப்பினும் கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் அசாதாரண அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.
கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட 90-180 நாட்களுக்குப் பின்னர் ஒன்பது முக்கிய நீண்ட கொரோனா அறிகுறிகள் ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திமா ஜீவந்தர கூறினார்.
நீண்ட கொரோனா அறிகுறிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி இருந்தன என்றும் மேலும் அவை பெண்களில் சற்று அதிகமாகவே இருந்தன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, அசாதாரண சுவாசம், வயிற்று அறிகுறிகள், கவலை, மனச்சோர்வு மார்பு அல்லது தொண்டை வலி, அறிவாற்றல் பிரச்சினைகள், சோர்வு, தலைவலி, தசை வலி உள்ளிட்ட ஏனைய வலிகளும் இதில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.