இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாக கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனை அமைச்சில் சந்தித்தபோதே, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கையின் நிலைப்பாட்டை இவ்வாறு தெரியப்படுத்தியுள்ளார்.
இதன்போது அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆற்றிய உரையில் கூறப்பட்டுள்ளதைப் போன்று பல தசாப்த கால மோதலைத் தொடர்ந்து, சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை அடைந்து கொள்வதற்கான முயற்சிகளை இலங்கை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், இலங்கை தொடர்பாக கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் கவலையளிக்கிறது.
இதேவேளை கனடாவில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட கனேடிய உயர்ஸ்தானிகர், “ஒன்ராறியோ சட்டமன்றத்தின் தீர்மானமான இந்த விடயம், அரசியலமைப்பு சார்ந்த கேள்வி என்ற வகையில் நீதித்துறையின் செயற்பாட்டில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.