தமிழகத்தின் 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மக்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின்; ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,324 கிராம ஊராட்சி தலைவர், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கே இந்த தேர்தல் நடைபெறுகின்றது.
2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு 6 ஆயிரத்து 652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 34 இலட்சத்து 65ஆயிரத்து 724 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற இருக்கின்றது.
அந்தவகையில் கடைசி ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிப்பார்கள்.
இதேவேளை அசம்பாவிதங்களை தவிர்க்க வாக்குச்சாவடிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.