எங்களது வயிற்று பிழைப்புக்காகத்தான் நாங்கள் போராடுகின்றோம். ஆகவே வடக்கு மீனவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று யாரும் எண்ணக்கூடாது என யாழ்.மாவட்ட மீனவ சம்மேளத்தின் தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ் குருநகர் கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தின் எற்பாட்டில் இந்திய இழுவைப்படகு எல்லைதாண்டி வருவதை தடுக்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அ.அன்னராசா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர், இலங்கைக்கு வருகைத் தந்தப்போது, தமிழ் அரசியல் கட்சியினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
ஆனால், இதன்போது இந்திய மீனவர்கள் எல்லை தாண்டும் அத்துமீறல் தொடர்பில் யாரும் பேசியதாகயில்லை. அது மிகவும் வேதனை அளிக்கின்றது.
இந்தியாவில் தமிழ் நாட்டிலுள்ள தொப்பில் கொடியிருக்கும் எங்களுக்கு உதவி செய்கின்றார்கள். அதற்கு நன்றிக்கடனாக இருப்போம்.
ஆனால் எமது வாழ்வாதாரமான தொழிலை அழிக்கும்போது வடக்கு மாகாண மீனவர்கள் என்னசெய்வது.
இந்தியாவில் ஆறுகோடி மக்கள் இருக்கின்ற இடத்தில் சுமார் 2000, 3000 இழுவைமடி படகுகள்தான் இருக்கின்றது. இலங்கை கட்டளை கோவைப்படி நடைமுறைப்படுத்தலாம். இந்த விடயத்துக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காணலாம் என இனியும் இலங்கை அரசாங்கம் ஏமாத்தகூடாது.
வெளிநாட்டு மீனவ நடைமுறையான சட்டத்தினை முற்றுமுழுவதுமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையிலான நிலைப்பாடாக காணப்படுகின்றது.
நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று யாரும் எண்ணக்கூடாது. தாயும் பிள்ளையும் ஒன்றாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு, வயிற்று பிழைப்புக்காகத்தான் நாங்கள் போராடுகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.