மட்டக்களப்பு- கொம்மாதுறை, தீவுப்பகுதியிலுள்ள பண்ணையின் காவலாளி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர்ப்பற்று- ஒருமுலைச்சோலை கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த 53 வயதான கனகரெட்ணம் தியாகராசா என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கொம்மாதுறை தீவுப்பகுதியிலுள்ள கால்நடைப்பண்ணை ஒன்றில் இவர் கூலித்தொலிலாளியாக சுமார் 5 வருடமாக வேலை புரிந்து வந்துள்ளார்.
அந்தவகையில் நேற்று காலை, அவர் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றதாகவும் அங்கு தகராறுகள் இடம்பெற்றதாகவும் உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடயவியல் பொலிஸார் மற்றும் ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறும் பணிப்புரை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
















