5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெள்ளை வேனில் கடத்தி, காணாமல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பகிர்வு பத்திரத்தை மீளப் பெற சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
முன்னாள் கடற்படை தளபதி, மேன் முறையீட்டு நீதிமன்றில் கொழும்பு, ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்ற வழக்கு விசாரணைகளை நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்துள்ள ரீட் மனு மீதான பரிசீலனைகள் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போதே சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி இதனை அறிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுடன் மன்றில் ஆஜரான சட்டத்தரணி நுவன் போப்பகே, சட்ட மா அதிபர் மனுதாரருக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரத்தை மீளப் பெறுவதற்கான காரணத்தை மன்றுக்கு அறிவிக்க வேண்டும் என கோரினர்.
இவ்வாறான நிலையில், குற்றப் பத்திரிகையை மீளப் பெறுவது தொடர்பில் ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றுக்கு அறிவிக்க, சட்ட மா அதிபர் தரப்புக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்தது.
இந்நிலையில், இந்த ரிட் மனு மீதான பரிசீலனைகள் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது