ஐ.பி.எல். ரி-20 தொடரின் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிப் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சார்ஜாவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் டெல்லி கெபிடல்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தவான் 36 ஓட்டங்களையும் ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சில், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் லொக்கி பெர்குசன் மற்றும் சிவம் மாவி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 136 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.ஸ
கொல்கத்தா அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக, வெங்கடேஷ் ஐயர் 55 ஓட்டங்களையும் சுப்மான் கில் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
டெல்லி அணியின் பந்துவீச்சில், என்ரிச் நோட்ஜே, ரபாடா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அவிஷ்கான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 41 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக 55 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வெங்கடேஷ் ஐயர் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள கொல்கத்தா அணி, நாளை டுபாயில் நடைபெறவுள்ள மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இதுவரை கொல்கத்தா அணி இரு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இரு முறையும் சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இதில் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில், சென்னை அணியை 22 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டு கொல்கத்தா அணி சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், நடப்பு தொடரில் இரண்டு முறை சென்னை அணியை எதிர்கொண்ட கொல்கத்தா அணி, இரண்டு போட்டிகளிலுமே தோல்வியை சந்தித்தது.