கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் மூலாதாரத்தைக் கண்டறிவதற்கான புதிய நிபுணர் குழுவை உலக சுகாதார அமைப்பு அமைத்துள்ளது.
கொரோனா எங்கு தோன்றியது என்பதைக் கண்டறிவதற்கான கடைசி முயற்சியாக இது இருக்கலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய நோய்க்கிருமிகளின் மூலத்திற்கான அறிவியல் ஆலோசனைக் குழுவில் 26பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தை அல்லது ஆய்வகத்தில் இருந்து இது பரவியதா அன்று இந்தக் குழு ஆராயும்.
முன்னதாக உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவினர் சீனாவின் வுகான் ஆய்வகத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. ஆனால் அங்கு வைரஸ் பரவியதற்கான எந்த வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
இதனிடையே, ஆய்வகத்தில் இருந்து பரவியதாகக் கூறப்படும் கூற்றை சீனா தொடர்ந்து கடுமையாக மறுத்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.