நாட்டில் வழமையான செயற்பாடுகளை படிப்படியாக முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார விதிமுறைகளும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.
அந்தவகையில், மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என்றும் தினமும், இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை விதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, பொது மக்கள் ஒன்றுகூடுவது மற்றும் வைபவங்களுக்கு மறு அறிவித்தல் வரை அனுமதி இல்லை என்றும் தொழில், சுகாதார தேவைகள் மற்றும் பொருட்கொள்வனவிற்காக வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியேற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பல்பொருள் அங்காடிகள், சுப்பர் மார்க்கெட்கள், மருந்தகங்களில் 20 வீதமானவர்கள் மாத்திரமே குறிப்பிட்ட நேரத்திற்குள் கொள்வனவில் ஈடுபட முடியும் எனவும் பயிற்சி பட்டறைகள், மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் இணையத்தளத்தினூடாக மாத்திரமே இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணங்களில் அதிகபட்சம் 50 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, பண்டிகைகள், களியாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு விடுதிகளில் 30 வீதமானவர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட முடியும் என்றும் உணவு விடுதிகளுக்குள் மது அருந்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்து வாகனங்களில் ஆசனங்களுக்கு ஏற்ப மாத்திரமே பயணிகள் பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகையலங்கார நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களுக்கு முன்னறிவித்தலின் பின்னரே வாடிக்கையாளர்கள் செல்ல முடியும் என்றும் இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்ப பாடசாலைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்ட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் 50 வீதமான மாணவர்களுடனேயே இயங்க முடியும்.
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் ஒரு காட்சிக்காக 25 வீதமான பார்வையாளர்களை உள்வாங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.