இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போதைய கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் இறக்குமதிக்காக இந்தக் கடனைப் பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக நிதி அமைச்சு இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் வரை மட்டுமே நாட்டில் தற்போது எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அதற்கு பின்னரான பெட்ரோல் மற்றும் டீசல் தேவைகளை கொள்வனவு செய்ய இந்த கடன் பயன்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் எரிசக்தி செயலாளர்கள் விரைவில் கடனுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை கடந்த மூன்று வருடங்களின் பின்னர் பாரியளவில் அதிகரித்துள்ளது.
இதற்கமைய பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85 அமெரிக்க டொலராகவும் அமெரிக்காவின் டபிள்யூ டீ ஐ ரக மசகு எண்ணெய்யின் விலை 82.28 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.