அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்றுள்ளார்.
31 வயதான பட்டின்சனுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், அவர் நேற்று (புதன்கிழமை) தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.
எனினும், உள்நாட்டு கிரிக்கெட்டில் தாம் தொடர்ந்து விளையாடப் போவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் விக்டோரியா அணிக்காக விளையாடி வரும் ஜேம்ஸ் பட்டின்சன், சமீபத்தில் அந்த அணிக்குள்ளாக நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது முழங்கால் உபாதைக்குள்ளாகினார்.
இதனால், ஏற்பட்ட உடற்தகுதி பிரச்னை காரணமாக எதிர்வரும் ஆஷஸ் தொடரிலும் அவர் இடம்பெற்றிருக்கவில்லை. இந்தநிலையில் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஜேம்ஸ் பட்டின்சன், இறுதியாக கடந்த ஆண்டு ஜனவரியில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடியிருந்தார்.
இதுவரை அவர் 21 டெஸ்ட் போட்டிகளில் 81 விக்கெட்டுகளும், 15 ஒருநாள் போட்டிகளில் 16 விக்கெட்டுகளும், 4 ரி-20 போட்டிகளில் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.