ராணி எலிசபெத், ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்காக ஒருநாள் மருத்துவமனையில் தங்கியதற்கு பிறகு, தற்போது அவர் மீண்டும் வின்ட்சர் கோட்டையில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
95 வயதான ராணி எலிசபெத், வின்ட்சரில் இருந்து 19 மைல் (32 கிமீ) தொலைவில் உள்ள மேரில்போனில் உள்ள கிங் எட்வர்ட் VII மருத்துவமனை இருந்து நேற்று (வியாழக்கிழமை) மதிய உணவு நேரத்தில் திரும்பினார் என பக்கிங்ஹாம் அரண்மனை குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவ ஆலோசனையைத் தொடர்ந்து, ராணி புதன்கிழமை பிற்பகல் சில ஆரம்ப சோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றார். வியாழக்கிழமை மதிய உணவு நேரத்தில் வின்ட்சர் கோட்டைக்குத் திரும்பினார், மேலும் அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது ஈடுபாட்டின் வேலைப்பளு காரணமாக, ராணி புதன்கிழமை வடக்கு அயர்லாந்திற்கான விஜயத்தை இரத்து செய்தார்.
பரிசோதனைகளுக்காக உட்படுத்தப்பட்ட ராணி, கொவிட் சோதனைகளை மேற்கொள்ளவில்லை என புரிந்து கொள்ளப்படுகிறது. அதேபோல ராணி வியாழக்கிழமை பிற்பகல் தனது கடமைகளை மேற்கொண்டார்.
கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு ராணி மருத்துவமனையில் தங்கி இருப்பது இதுவே முதல் முறை, அவர், இரைப்பை குடல் அழற்சியின் அறிகுறிகளால் அவதிப்பட்டார்.
கிங் எட்வர்ட்VII என்பது மூத்த அரச குடும்பத்தினரால் பயன்படுத்தப்படும் ஒரு தனியார் மருத்துவமனையாகும், ராணியின் கணவர், மறைந்த மறைந்த எடின்பரோவின் கோமகன் ஃபிலிப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அங்கு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.