மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
வவுனியாவில் தமிழ் மக்களின் மரபுரிமையுடைய பூர்வீக கிராமத்துடன் வடமத்திய மாகாண எல்லையில் உள்ள கிராமங்களை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வடக்கு – வட மத்திய மாகாணங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பதன் ஊடாக வடக்கு மாகாணத்தின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றி அமைத்து, தமிழ் மக்களின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்க திட்டம் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு முரணாகவும், இன நல்லிணக்கத்தை பாதிக்கின்ற செயலாகவும் இந்த நடவடிக்கை அமைவதாகவும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஆகவே இந்த் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், இந்த நடவடிக்கையை உணனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சமல் ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.