ஆசியக் கண்டத்தில் அதிகளவான வெப்பநிலை, கடந்த ஆண்டு பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
கொப் 26 உச்சிமாநாட்டிற்கு சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபை இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொப் 26 உச்சிமாநாடு எதிர்வரும் ஞாயிற்றுகிழமை முதல் நவம்பர் மாதம் 12ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆசியாவின் வருடாந்த தட்ப வெப்பநிலை தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் ஐ.நா.சபையின் உலக வானிலை அமைப்பு, பிராந்தியத்தின் ஒவ்வொரு பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஆசியா முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் காரணமாக, சீனாவுக்கு 283 பில்லியன் டொலரும், இந்தியாவுக்கு 87 பில்லியன் டொலரும், ஜப்பானுக்கு 83 பில்லியன் டொலரும், தென்கொரியாவுக்கு 23 பில்லியன் டொலரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.