கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியை மோசமாகக் கையாண்டதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா மீதான விசாரணைக்கு, நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரேஸிலில் கொவிட் தொற்றுப் பரவல் தீவிரமாக இருக்கும்போது அறிவியல் ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்காமல், கொவிட் குறித்து தவறான தகவல்களை மக்களிடத்தில் பதிவு செய்துவந்ததால், போல்சனோரா மீது சட்டபூர்வமாகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பரிந்துரை செய்தனர்.
ஜெய்ர் போல்சனோரா மீது பிரேஸில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலை உட்பட 13 குற்ற வழக்குகளைப் பதிவு செய்து விசாரணையை நடத்த வேண்டும் என்ற பரிந்துரையை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தனர்.
இதில் 11பேர் அடங்கிய பிரேஸிலின் நாடாளுமன்றக் குழுவில் 7 பேர் ஜெய்ர் போல்சனோரா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஒமர் அசிஸ், இந்தப் பரிந்துரையை பிரேஸிலின் அரச தலைமை வழக்கறிஞரிடம் ஒப்படைத்தார்.
கொவிட் தடுப்பூசி செலுத்துவது அவசியமற்றது எனத் தெரிவித்த ஜெய்ர் போல்சனோரா, கொவிட்டைப் பற்றிக் கவலைப்படாமல், முகக்கவசம் அணியாமல், மக்கள் சுதந்திரமாக வெளியே வரவேண்டும் என கூறியதற்கு உலக அளவில் கண்டனம் எழுந்தது. அத்துடன் உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானார்.