சில தொழிற்சங்கங்களின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் இன்று (புதன்கிழமை) இலங்கையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாதென மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
கெரவலப்பிட்டி மின் நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்த உடன்படிக்கையை இரத்து செய்யக்கோரி இன்று முதல் இரு நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார சங்கத்தின் ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே இவ்வாறு தெரிவித்தார்.
மின்சார விநியோகம் தொடர்பான நடவடிக்கைகள் இன்று சுமூகமாக நடைபெறும் என பெரும்பாலான மின்சார தொழிற்சங்கங்கள் உறுதியளித்துள்ளதாக அவர் கூறினார்.
ஜே.வி.பி.யுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் மாத்திரமே இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் ஆனால் அது மின்சார விநியோகத்தை பாதிக்காது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மின்துறையின் முக்கிய ஊழியர்கள் பணியை நிறுத்தினால், மின்சாரம் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித அவர், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உறுதியளித்தார்.
மின்சாரம் வழங்குவதற்கான தேவை ஏற்படாத காரணத்தினால் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.