நாடு இருளில் மூழ்குவதற்கு முகங்கொடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு, கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாடு ஒரு இருட்டடிப்பை எதிர்கொள்ளும் பட்சத்தில், அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அரச வளங்களை கையளிக்கும் இரகசிய உடன்படிக்கைகளின் விளைவாக தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர்கள் தங்கள் தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானிக்கவில்லை என்றும் மாறாக தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவே என்றும் அவர் கூறினார்.
தேசிய வளங்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்து அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகக் கூறிய அவர், மிக முக்கியமான தேசிய சொத்தாக விளங்கும் எரிசக்தித் துறையை விற்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.